• vilasalnews@gmail.com

அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் ஏன் ?... சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

  • Share on

அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் ஏன்? அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, முறைகேட்டில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் பல்லூரில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி என வழக்கு தொடர்ந்த நபர், அரசுப் பள்ளி ஆசிரியர் என்றும், அதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளதாகவும் அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச பட்டா பெற்றவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.

இது போன்ற அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கையில் அதற்கான சங்கங்கள் போராடுகின்றன எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? என வினவினர். பெரும்பாலான சங்கங்கள் சாதி, மதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்றும், அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினர்.

முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட வேண்டும்,  புகார் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் சொத்துக்களையும் சேர்த்து மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும், அப்போது தான் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜா மற்றும் அவருக்கு பட்டா வழங்கிய வட்டாட்சியர் ஆகியோரின் சொத்து விபரங்கள், வங்கிக்கணக்கு விபரங்கள், அவர்களது குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றனர்? என்பது தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் ராஜா மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதன் நகலையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஏன் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லை? அவ்வாறு சேர்த்தால்தான் அரசுப்பள்ளிகளின் தரம்  உயரும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள்,  பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு மோசமான உதாரணம் என கண்டனம் தெரிவித்தனர்.


  • Share on

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் - முதல்வர் பழனிசாமி

எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

  • Share on