நெய்வேலியில் லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால் மற்ற லாரிகளுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். 30 லாரிகளை அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் இருந்து லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மேலக்குப்பம் என்ற கிராமத்தின் வழியாக சென்ற போது, மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது மனைவியுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த லாரியில் சிக்கி விபத்துக்குள்ளாகி கோவிந்தன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக நெய்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவ்வழியாக வந்த மற்ற 5 லாரிகளுக்கு தீ வைத்துள்ளனர். 30 லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.