கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே காவல்துறையினர் உடன் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் எம்.எல்.ஏ விடுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவையில் எஸ்.பி.வேலு மணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. டெண்டர் முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியதாக புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. பி.அன்பரசன், பி. சந்திரசேகர், உள்ளிட்ட 17 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் சோதனை நடக்கும் எஸ்.பி. வேலுமணியின் வீட்டு முன்பு அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.குனியமுத்தூரில் போலீசார் கொண்டு வந்த இரும்பாலான தடுப்பை அதிமுகவினர் கைப்பற்றி தூக்கி சென்றனர்.
சென்னையில் வேலுமணியிடம் விசாரணை நடக்கும் எம்எல்ஏ விடுதி முன்பும் அதிமுகவினர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப் பட்டுள்ளனர்.சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி அறையில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதிமுக வழக்கறிஞர்கள் விடுதிக்குள் செல்ல முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்; அதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.