மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு காலணி அணிவித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் மாற்று திறனாளி வேல்முருகன். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது 3 வயது மகன் அழகுமணி. மாற்றுத் திறனாளி. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த வேல் முருகன், கடந்த ஜூலை 5ஆம் தேதி உதவி கோரி, மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்திருந்தார்.
அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு மாற்று திறனாளியான வேல்முருகன் மற்றும் அவரது மகன் அழகுமணிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் காலணிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் சமீரன் சிறுவனின் கால்களை பிடித்து காலணிகளை மாட்டி விட்டார். பின்னர், சிறுவனை நடக்க செய்த ஆட்சியர், அவனை தூக்கிச்சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தார். ஆட்சியரின் இந்த கனிவான செயலை கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண் கலங்கியபடி, அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் வேல்முருகன், குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதனை, பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் காலணிகளை மாட்டிவிட்ட சம்பவம் கோவை மக்களிடையே வெகுவாக பாராட்டுகளை பெற்று உள்ளது.