ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் புழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இது பல மோசடிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் பெருகியுள்ளன.
இந்த நிலையில், 10 நிமிடத்தில் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களின் எண்களை பதிவிடுமாறு மெசேஜ் வந்தால் அதை தொட வேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்குகள் வைத்திருக்கும் பலருக்கு அதிகாரப்பூர்வமாக வங்கிகளிலிருந்து அனுப்பப்படுவது போல 10 நிமிடங்களில் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும் என செல்போனுக்கு மெசேஜ் வருகிறது. இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதை நம்பி பொதுமக்கள் பலர் தங்களது ஆதார் கார்டு எங்களை கொடுப்பதால் அவர்களது வங்கி கணக்கில் இருந்தும் ஏடிஎம் மூலமாகவும் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
எனவே, இதுபோன்ற மெசேஜை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் வங்கியிலிருந்து இது போன்ற மெசேஜ் வராது என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வங்கிகளே, மக்கள் தங்களது விவரங்களை வழங்க வேண்டாம் என எச்சரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.