திருப்பூரில் நண்பனுடன் ஒரே அறையில் தங்கி இருந்து போதையில் தகராறு செய்த 3 நண்பர்களை தலையில் கல்லைபோட்டு கொலை செய்த சைக்கோ இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள குடியிருப்பில் பனியன் நிறுவன தொழிலாளிகள் இருவர் ஓரே அறையில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் முதல் வாரம், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், வீட்டினுள் சென்று ஆய்வு செய்த போது மூடப்பட்ட சிமெண்டு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர்.
உள்ளே அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
கொல்லப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து என்பதும் அவருடன் தங்கிருந்த மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.
சங்கரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, அவரிடம் கடைசியாகப் பேசிய நபரிடம் போலீஸார் விசாரிக்கையில், `ஒரு வழக்கு தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சங்கர் இருந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் கேட்ட போது, மற்றொரு கொலை வழக்கில், சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி திருப்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில், கடந்த 2018-ல் கங்காநகர் பகுதியில் உடன் தங்கியிருந்த நண்பருடன் ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் கல்லைப்போட்டு சங்கர் கொலை செய்தது தெரியவந்தது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர், 90 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்துள்ளார். அதனை தொடர்ந்து இசக்கிமுத்துவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரே அறையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இசக்கிமுத்துவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்து அந்த சடலத்துடன் ஒரு வாரம் அதே அறையில் தங்கியுள்ளான் சங்கர். அதன் பிறகு வெங்கமேட்டிலுள்ள தனது நண்பர் இளம்பரிதியுடன் ஒரே அறையில் தங்கியுள்ளான்.
அங்கு இளம்பரிதிக்கும் அவரது நண்பர் பாக்கியம் அன்பரசு என்பவருக்கும் போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாக்கியம் அன்பரசுவை கொலை செய்துள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கூட்டாளி இளம்பரிதியுடன் கைதாகி நவம்பர் 12ம் தேதி கோவை சிறைக்கு அனுப்பர்பாளையம் போலீசாரால் அனுப்பபட்டுள்ளார்
குடிபோதையில் மூன்று பேரையும் ஒரே பாணியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், இசக்கி முத்து கொலை வழக்கில் சங்கரை 3 வது முறையாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.