திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் மருத்துவமனையை திறந்துவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக்கூறி தனது உரையை முடித்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியையும், பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் நேரில் சந்தித்து பேசினார். பின்னர், தமிழ்நாடு திரும்பிய அவர் நேற்று திருவள்ளூர் அருகே உள்ள பெரியபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
பெரியபாளையம் அருகே தண்டலம் என்ற கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பின்னர், அந்த விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பேசினார்.
இறுதியில் அவர் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக்கூறி உரையை முடித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் இறுதியில், ஜெய்ஹிந்த் உச்சரிக்கப்படாதது பேசுபொருளானது. இந்த சூழலில், நிகழ்ச்சியொன்றில் ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் தமிழ்நாடு என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.