தென்காசி அருகே மகனின் பள்ளித் தோழியை திருமணம் செய்த தந்தை... சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். (70)தங்கராஜூக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், கடந்த 15 வருடங்களாக 2 - வது மனைவி சண்முகசுந்தரியுடன் வசித்து வருகிறார். தங்கராஜின் மூத்த மனைவியின் மகன் திருக்குமரன் (43). இவர் கடையம் அருகேயுள்ள புலவனூரில் வசித்து வருகிறார்.
சண்முக சுந்தரி திருக்குமருடன் ஒரே பள்ளியில் படித்துள்ளார். சண்முக சுந்தரியிடம் ஆசை வார்த்தை கூறி தங்கராஜ் அவரை திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. தனது தோழி தனது சித்தியானதால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் திருக்குமரன். இந்த நிலையில் , தங்கராஜ், தன் பெயரிலிருந்த 40 ஏக்கர் சொத்தில் 15 ஏக்கர் நிலத்தை மூத்த மனைவி வெள்ளையம்மாளுக்கும், 25 ஏக்கர் நிலத்தை இரண்டாவது மனைவி சண்முக சுந்தரிக்கும் எழுதி வைத்துள்ளார். இதன் காரணமாக, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே 10 வருடங்களுக்கும் மேலாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தங்கராஜூக்கும் அங்கு வந்த திருக்குமரனுக்கு இடையே சொத்து தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருக்குமரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தை தங்கராஜை வெட்டியுள்ளார். இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த கடையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.