சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் தம்பி இறந்த தகவலை மறைத்து அவருடைய சகோதரிக்கு உறவினர்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். கூலி வேலை செய்யும் ஜெகதீசனின் சகோதரிக்கு இன்று அதிகாலை மல்லூரில் இருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் ஜெகதீசன் மற்றும் ஜெகதீசனின் நண்பர்கள் அஜீத்குமார், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தொட்டில்பட்டியிலிருந்து திருமண மண்டபத்துக்குச் சென்றனர்.
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள திருப்பத்தில் வேகமாகத் திரும்புகையில், எதிரே கரூரில் இருந்து ஓசூருக்குச் சென்ற பேருந்துடன் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததும், அதில் 3 பேர் பயணித்ததுமே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது
சாலை விபத்தில் இறந்த ஜெகதீஷ் கூலி வேலைக்கும், கார்த்திகேயன் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பணியாற்றி வந்தனர். அஜீத் குமார் இன்ஜினியரிங் படித்து வந்தார். சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த, போலீசார் 3 பேரின் சடலங்களை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
ஜெகதீசன் இறந்த தகவல் தெரிந்தால் திருமணம் தடைபடும் என்பதால், சகோதரிக்கும் பெற்றோருக்கும் உறவினர்கள் விபத்து பற்றி தெரியப்படுத்தவில்லை.