கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்ப இருந்த பார்சல்களை ஸ்கேன் செய்யும் போது அதில் கை துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து டெல்லிக்கு நேற்று பிற்பகல் இண்டிகோ விமானம் செல்ல இருந்தது . இந்த விமானத்தில் பார்சல்களை அனுப்பும் கார்கோ பகுதியில் , பார்சல்களை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம் போல ஸ்கேன் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சேலத்திலிருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றில் துப்பாக்கி இருப்பது ஸ்கேனிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கார்கோவில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் அளித்தார். புகார் அடிப்படையில் பீளமேடு போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைதுப்பாக்கி ஒரிஜினல் துப்பாக்கி அல்ல என்பதும், விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.
விளையாட்டு துப்பாக்கி பழுதடைந்த நிலையில் அதை ரிப்பேர் செய்ய சேலத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானம் மூலம் உத்திரபிரதேசத்திற்கு அனுப்பியதும் தெரியவந்தது.சேலத்திலிருந்து துப்பாக்கியை டெல்லிக்கு அனுப்பிய சாமுவேல் ஸ்டீபன் என்ற நபரிடம் தொலைபேசி மூலம் விசாரித்த பீளமேடு போலீசார் கோவை பீளமேடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று அவரிடம் விளையாட்டு துப்பாக்கியை பார்சலில் அனுப்பியது குறித்து விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். கார்கோ சோதனையில் கைதுப்பாக்கி சிக்கியதால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.