நாட்டிலேயே பழங்குடியினருக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி, நீலகிரி மாவட்டம் சாதனை புரிந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில், நோய் பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் அதிகளவு பழங்குடியின மக்கள் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து தீவிரம் காட்டி வந்தனர்.
இங்கு படுகர், தோடர், குரும்பர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின சமூக மக்கள் வசித்து வரும் நிலையில், மருத்துவக் குழுவினர் அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடக்கத்தில், பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் தெரிவித்த போதும், பின்னர் தாமாக முன்வந்து செலுத்திக் கொண்டனர்.
இதனால், சுகாதாரத்துறையினர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 21 ஆயிரத்து 800 பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்தனர். நாட்டில் உள்ள எந்த ஒரு மாவட்டத்திலும் பழங்குடியினருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், நீலகிரி மாவட்டம் இந்த சாதனையை நிகழ்த்தியது. இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று நீலகிரியில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்:
நாட்டிலேயே நீலகிரி மாவட்டம், பழங்குடியின மக்கள் அனைவருக்கும், 100 சதவீத தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டமாக சாதனை படைத்து உள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது விடா முயற்சியால் இதனை சாதித்துக்காட்டிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு, தமிழக முதலமைச்சர் நாளை விருது வழங்கி கௌரவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.