• vilasalnews@gmail.com

கூடங்குளம் அணு உலை விரிவாக்க பணிகள் நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எதிர்ப்பாளர் சு.ப.உதயகுமார் பேட்டி.

  • Share on

கூடங்குளம் அணு உலை 5, 6 விரிவாக்க பணிகள் நடைபெறுவதை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சு.ப.உதயகுமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இன்று மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, கூடங்குளம் அனுஉலை போராட்டம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகளை தமிழக முதல்வர் வாபஸ் பெற்றதற்கு அமைச்சரிடம் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சு.ப.உதயகுமார் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5வது, 6வது அணு உலைகளுக்கு முதல் கான்கிரீட் போடும் நிகழ்வை இன்றைக்கு கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே முதல் அணு உலை 70 நாட்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு வருடாந்திர பராமரிப்பு என்று அந்த உலை ஓடும் நாட்களை விட நிற்கும் நாட்கள் தான் அதிகம் என்றார். இந்த சூழலில், இரண்டாவது அணு உலையிலும் தொடர்ந்து பழுது ஏற்பட்டு மே மாதம் மட்டுமே மூன்று முறை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென 5வது, 6வது அணு உலைகளுக்கு தொடக்க நிகழ்வுகள் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.


ஓட்டு மொத்த தமிழகத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்த கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணுக்கழிவு மையத்தை அமைக்க கூடாது என வலியுறுத்தி தமிழக முதல்வரை சந்தித்து விரைவில் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழகத்துக்கும் மட்டுமல்ல, தென் கேரளத்துக்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கே பெரும் கேடு விளைவிக்கிற இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதி மீனவ, விவசாய, வணிக பெருங்குடி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினோம். அப்போது இருந்த அதிமுக அரசு மக்கள் கோரிக்கைகளை கடுகளவும் மதிக்கவில்லை.

இந்த ஜனநாயக விரோத போக்கினால் தான் இன்றைக்கு மக்கள் மனம் தளர்ந்து ஜனநாயக அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த அழிவு திட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். தமிழக அரசு ஹைட்ரோ கார்பன், சேலம் - சென்னை எட்டு வழி சாலை இப்படிப்பட்ட பல மக்கள் விரோத திட்டங்களை தடுத்து எதிர்த்து வருகிறது.

அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஆபத்தாக இருக்கிற கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் எதிர்க்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இது முழுக்க முழுக்க ஓன்றிய அரசினுடைய பொறுப்பு அவர்கள் ஜனநாயகத்தை மதிக்காததால் வந்த வினை. ஆனால் நாங்கள் தொடர்ந்து எங்களுடைய வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம், தேவைப்பட்டால் களம் இறங்கிப் போராடவும் செய்வோம் என்றார்.

மேலும், நாங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சி, மின்சாரத்துக்கு எதிரானவர்கள் அல்ல, நாங்கள் நம்முடைய வருங்கால சந்ததிகளை அளிக்காத வகையில் இவற்றை திட்டமிட வேண்டும் என்று சொல்கிறோம். 40 ஆண்டுகள் நம்முடைய தலைமுறைக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அடுத்து வருகிற 400 தலைமுறைகளை அழிப்பதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்

  • Share on

மாநகராட்சிகளின் சொத்துக்கள் இணையதளத்தில் வெளியிடும் திட்டம்!!

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்!

  • Share on