மாநகராட்சிகள், நகராட்சிகளின் சொத்துக்கள் விபரத்தை, இணையதளத்தில் வெளியிடும் திட்டத்தை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.
மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பராமரிக்க, புதிய இணைதள சேவையை, அமைச்சர் நேரு துவக்கி வைத்தார். இதில், முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சியின் சொத்து விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மாநகராட்சி, நகராட்சிகளின் சொத்துக்கள், ஒரு மாதத்திற்குள் பதிவேற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
கூட்டத்திற்கு பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
நகர்ப்புற உள்ளாட்சிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சாலை வசதி, மயான வசதி மற்றும் கழிவு நீர் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து உள்ளோம். மேலும், மாநகராட்சி, நகராட்சிக்கு தேவையான வசதிகள் குறித்தும், பட்ஜெட் குறித்தும் ஆலோசித்தோம்.
சென்னை போன்ற நகரங்களில், மழை காலங்களில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், 100 எம்.எல்.டி., நீர் கிடைக்கிறது. அதை, 400 எம்.எல்.டி.,யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும். இதன் வாயிலாக, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
எனவே, மற்ற மாநகராட்சி, நகராட்சிகளின் சொத்துக்கள், ஒரு மாதத்திற்குள் பதிவேற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன என அமைச்சர் நேரு தெரிவித்துள்ள நிலையில், ஒரு மாதத்திற்குள் தூத்துக்குடி மாநகராட்சியின் சொத்துக்கள் விபரங்களும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அவை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.