தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு திமுக ஆட்சிக்கு வந்திருப்பது பெருமையாக இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி காட்டுவார்கள். திமுக அடக்க முடியாத யானை. யானைக்கு நான்கு கால்கள் தான் பலம். அதே போல, திமுகவுக்கு சமூக நீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற நான்கு கொள்கை தான் பலம் என்றார். என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன. தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
இதையடுத்து, வளர்ச்சியில் பின்தங்கியுள்ள செய்யாறு, திண்டிவனத்தில் 22 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கொரோனா தொற்று குறைந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப் பெறப்படும் என்றும் அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.