கொரோன பரவல் குறைந்த மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் அதனை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி முதல் பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் பொதுமக்களுடைய நலன் கருதி அவ்வப்போது ஒவ்வொரு வாரமும் பல தளர்வுகளை தமிழக அரசு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு விதமான தளர்வுகள் என்பது கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த 11 மாவட்டங்களைப் பொருத்தவரை தொடர்ச்சியாக கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருவதினால் இந்த 11 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் பிற மாவட்டங்களில் 27 மாவட்டங்களைப் பொருத்தவரை கூடுதல் தளர்வுகள் வரும் 21ம் தேதியிலிருந்து கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிக முக்கியமாக பொது போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் இல்லாமல் மாவட்டத்திற்குள் இருக்கக்கூடிய பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.
இதைத் தவிர்த்து கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகளை பொருத்தவரை கடைகள் இயங்குவது அத்தியாவசிய கடைகள் இயங்குவதற்கான நேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்களாக பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வழிபாட்டுத் தலங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்கப் படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
நகரப்பேருந்து சேவையைப் பொருத்தவரை 50% பொதுமக்கள் மட்டும் பேருந்தில் செல்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என கருதப்படுகிறது.
பெரிய கடைகளை பொருத்தவரை குளிர்சாதன வசதிகள் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்குவதற்கான அனுமதி என்பதை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நூலகம் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 11 மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தால் அந்த மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளை மட்டும் வருகின்ற 21ம் தேதி முதல் தமிழக அரசு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சருடைய ஆலோசனைக்குப் பிறகு தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பினை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பின் இன்றோ அல்லது நாளையோ தளர்வுகள் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.