பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 25-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை 9 மாதத்திலேயே பிறந்ததாலும் குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இருந்ததாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த 25-ம் தேதி முதல் குழந்தை குளூக்கோஸ் ஏற்றபட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தை நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் தாயை சேயையும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று தெரிவித்தனர். வீடு திரும்புவதால் குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுமாறு செவிலியரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் செவிலியர், கையில் இருந்து ஊசியை அகற்றுவதற்கு பதிலாக கட்டை விரலை கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார்.
பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் செவிலியரின் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், செவிலியர் மீது தவறு இருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையில் முதல்வர் ரவிக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் குழந்தையின் தந்தை தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.