ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலப்பட்டியலில் தெண்டுல்கரின் மகன், ஸ்ரீசாந்த் உள்பட மொத்தம் 1,097 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணியிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் போக மற்றவர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் நடக்கிறது.
ஏலத்தில் இடம்பெற விருப்பம் உள்ள வீரர்கள் பிப்ரவரி 4-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை பதிவு செய்யலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் கூறியிருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் ஏலப்பட்டியலில் 814 இந்தியர்கள், 283 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 21 இந்தியர்கள் உள்பட 207 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர்.
வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 56 பேர் அங்கம் வகிக்கிறார்கள். ஆஸ்திரேலியா (42), தென்ஆப்பிரிக்கா (38), இலங்கை (31), ஆப்கானிஸ்தான் (30), நியூசிலாந்து (29), இங்கிலாந்து (21) ஆகிய நாட்டு வீரர்களும் கணிசமான அளவில் ஏலத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யவில்லை. அதே சமயம் ஏலத்தில் கவனத்தை ஈர்க்கும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், கிளைன் மேக்ஸ்வெல், இந்தியாவின் ஹர்பஜன்சிங், கேதர் ஜாதவ், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், ஜாசன் ராய், மொயீன் அலி, வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலானின் விலை ரூ.1.5 கோடியாகும். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், லபுஸ்சேன், இந்தியாவின் ஹனுமா விஹாரி உள்ளிட்டோரை ரூ.1 கோடியில் இருந்து ஏலம் கேட்பார்கள்.
ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கி 7 ஆண்டு தடையை அனுபவித்து சமீபத்தில் திரும்பிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தும் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அவரது தொடக்க விலை ரூ.75 லட்சமாகும். டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாராவும் (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) வழக்கம் போல் ஏலத்திற்கு வருகிறார்.
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கரின் பெயரும் ஏலத்தில் உள்ளது. உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியுள்ள அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும்.
ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வீரர்களின் இடத்தை முழுமையாக நிரப்பினால் மொத்தம் 61 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.