கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக நடராஜனை 3 கோடி ரூபய் கொடுத்து வாங்கிய போது, ஒவ்வொருவரும் என்னை கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசி அசத்தினார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதே அணியில் இடம் பெற்றிருந்த மற்றோரு தமிழ்நாட்டு வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகிவிட, நடராஜனுக்கு இந்திய அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் 3- வது ஒருநாள் போட்டியில் நடராஜன் களம் இறங்கினார். 10 ஓவர்கள் வீசி, 70 ரன்கள் விட்டுக் கொடுத்த நடராஜன் , ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் லபுசெய்ன், ஆஸ்டன் ஏகர் ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
களம் இறங்கிய முதல் ஒரு நாள் போட்டியிலேயே நடராஜன் இரண்டு விக்கெட்டுகளுடன் எண்ணிக்கையை தொடங்கியிருப்பது தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் நடராஜனை ஏலம் எடுத்தது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரேந்திர சேவாக் மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.