கடைசி நேரம் வரை ஏன் களத்தில் நிற்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார் தோனி. தோனிதான் என்னை இப்படி ஆட சொன்னது. கடைசி ஓவர் வரை நின்றால் கூடுதல் ரன் எடுக்கலாம் என்றும் கூறி இருக்கிறார் என இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து ஜடேஜா பேட்டி அளித்துள்ளார். அதில், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவதும், இங்கு விக்கெட் எடுப்பதும் மிகச் சிறந்த உணர்வை தருகிறது. ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையான அணி. அவர்களை அவர்களின் சொந்த மண்ணில் கூட எதிர்கொள்வது இகவும் சிறப்பான விஷயம். முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் சரியாக ஆடவில்லை.
ஆனால் கடைசி போட்டியில் வெற்றிபெற்று இருக்கிறோம். இதே மனநிலையோடு நாங்கள் டி 20 தொடரிலும் களமிறங்குவோம். இது எங்களுக்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இரண்டாவது போட்டியில் நான் கேட்ச் விட்டேன். அதன்பின் எனக்கு தூக்கமே வரவில்லை. அதை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தேன். கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை.
இனிமேல் எனது கைக்கு கேட்ச் வந்து, அதை 50% தான் பிடிக்க முடியும் என்றாலும் கூட பிடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இதற்காக கூடுதல் பயிற்சிகளை செய்தேன்.எனக்கு தோனி நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறார். சென்னை மற்றும் இந்திய அணி இரண்டிலும் தோனி எனக்கு நிறைய விஷயங்களை பாடமாக எடுத்து உள்ளார்.
முக்கியமாக கடைசி நேரம் வரை ஏன் களத்தில் நிற்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார். தோனிதான் என்னை இப்படி ஆட சொன்னது. கடைசி ஓவர் வரை நின்றால் கூடுதல் ரன் எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார். இதனால்தான் நாங்கள் நேற்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினோம்.
அவர் சொன்னது அப்படியே நடந்தது. அவருடன் பல முறை ஆடி இருக்கிறேன். அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இது. கடைசி ஒருநாள் போட்டியில் எனக்கு இந்த அனுபவம் பெரிய அளவில் உதவியது என்று ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.