சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள், ஜடேஜா 66- ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76- பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
303-ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சேன் ஆட்டம் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் நடராஜன். ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து உள்ளது.