டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவின் பெயரை முதன் முதலில் உச்சரிக்க வைத்த மீராபாய் சானு தனக்கு உதவிய லாரி டிரைவர்களை கூட கௌரவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் நேற்றோடு (ஆக.8) முடிவடைந்தது. இதில், இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றது.
ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை புரிந்தார். எனினும், இந்த ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றுக் கொடுத்து இந்தியாவை பதக்க பட்டியலில் இடம்பெறச் செய்த பெருமை மீராபாய் சானுவை தான் சாரும்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவின் பெயருக்கே நேரே அனைத்து பதக்க பிரிவுகளிலும் 'Nil' என்றே இருந்தது. அந்த வெற்றிடத்தை போக்கியவர் மீராபாய் சானு தான். பளுதூக்குதலில் பெண்கள் 49 கிலோ பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 87 கிலோ மற்றும் 115 கிலோ ஆகியவற்றில் அவரது லிஃப்டிங் மிக அபாரமாக இருந்தது. இது அவருக்கு மொத்தம் 202 கிலோ எடையைக் கொடுத்தது. அதேசமயம், சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இந்தோனேசியாவின் கான்டிகா ஐசா, மொத்தம் 194 கிலோவுடன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ 2020 ,ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் மெடல் கணக்கை வைத்தார் மீராபாய் சானு. இதுகுறித்து மீராபாய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, 'இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது மீராபாய் சானுவின் பதக்கத்தால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது' என்றும் குறிப்பிட்டிருந்தார். மணிபூர் மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மீராபாய் சானு, இன்று பளுதூக்குதல் போட்டியில் ஒளிர்வதற்கு முன்னால் காட்டில் விறகுக் கட்டைகளை தூக்கிய ஏழ்மையான வாழ்க்கை முறையில் வளர்ந்தவர்.
மீராபாய் சானுவின் அம்மா பெட்டிக்கடை நடத்தி வந்தார். வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் காட்டிற்கு சென்று மீராபாய் சானுவும் அவரது சகோதரரும் விறகுக் கட்டைகளை வெட்டி எடுத்து சுமந்து வருவார்கள். இதில், தனது சகோதரனை விட அதிக எடை விறகுக் கட்டைகளை சுமந்தவர் மீராபாய் சானு தான். இப்படியொரு வறுமையான சூழலில் வாழ்ந்து வளர்ந்தவர் மீராபாய் சானு. இவரை பளுதூக்குதலுக்கு அழைத்து வந்தவர் குஞ்சராணி தேவி என்பவர் தான். குஞ்சராணி தேவியின் பளுதூக்கும் திறமையைப் பார்த்து தானும் பளுதூக்கும் வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினார்.
தன் தொடக்க கால நாட்களைப் பற்றி மீராபாய் சானு பேட்டி ஒன்றில் கூறியபோது, 'நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது' என்றார். அப்படியெனில், எந்தளவுக்கு வறுமை சூழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நிலையில், மீராபாய் சானு, தன் வெற்றிக்காக உறுதுணையாக இருந்த பலரையும் கவுரவித்து வருகிறார். தன் வெற்றிக்கு அணில் போல் உதவி புரிந்த லாரி டிரைவர்களுக்கு என்று தனியாக விழா எடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ வைத்திருக்கிறார் மீராபாய் சானு. ஆம்! மீராபாயின் கிராமம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விளையாட்டு அகாடமியில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. மீராபாய் சானு பயிற்சி நடைபெறும் இடத்தை அடைய தினமும் மணல் ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்களுடன் சவாரி செய்திருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டிரக் டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை அழைத்து அவர்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி அவர்களை கௌரவித்துள்ளார் மீராபாய் சானு.