ஒலிம்பிக் ஹாக்கி ஆண்கள் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி போன் செய்து பாராட்டினார்.
ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்கு பின் இதன் மூலம் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியது. இன்று பரபரப்பாக ஆட்டத்தில் 5:4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய வீரர்களுக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வெற்றிக்கு பின் இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி போன் செய்து பாராட்டினார். போட்டிக்கு பின்பாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போன் சென்றது. இதில் கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. நீங்கள் மிகவும் சிறப்பான வெற்றியை பெற்று இருக்கிறீர்கள்.
மொத்த இந்திய ஆண்கள் அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு வெண்கலம் வாங்கிக்கொடுத்த உங்களுக்கு என்னுடைய அன்புகளையும், வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்தியாவின் கவனத்தை, நம்பிக்கையை நீங்கள் ஹாக்கி பக்கம் திருப்பி உள்ளீர்கள். முக்கியமாக இளைஞர்களின் கவனத்தை நீங்கள் ஹாக்கி பக்கம் திருப்பி உள்ளீர்கள்
இந்தியா உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் கண்டிப்பாக பிணைந்து இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமர் மோடியிடம் இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் ஸ்பீக்கர் போனில் பேசும் போது ஹாக்கி அணியின் கோச் கிரஹாம் ரெய்டு உடன் இருந்தார். அதேபோல் அணியின் துணை கோச் பியூஸ் துபே உடன் இருந்தார்.
பிரதமர் மோடியின் வாழ்த்தை தொடர்ந்து இந்திய கேப்டன் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்திய கேப்டனிடம் மோடி பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.