அய்யா வைகுண்டர் அவதார தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாதிக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவரும், ஆன்மீக சீர்திருத்தவாதியும், சமத்துவம் சமூக நீதி சுயமரியாதையை ஊக்குவித்தவரும், சூட்சும வடிவில் மக்களுக்கு அருள்புரிந்து கடவுள் அவதாரமாக கருதப்படுவருமான அய்யா வைகுண்டர் அவதார திருநாளான மாசி மாதம் 20ஆம் தேதி ஆண்டுதோறும் தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிய கொடுமைகளுக்கு எதிராக புரட்சி செய்து மன்னரின் மனதை மாற்றி நல்வழிப்படுத்திய அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இருப்பினும் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அய்யா வைகுண்டரை பின்பற்றும் மக்கள் தமிழகமெங்கும் பதிகளையும், திருதாங்கல்களையும் நிறுவி வணங்கி வருகின்றனர்.
ஆகவே, மாசி மாதம் 20ந் தேதி மார்ச் 4ந் தேதி அன்று தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கையை முன் வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.