சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது அனைத்து முருகன் கோயில்களிலும் நடைபெறும் போது திருத்தணி கோயிலில் மட்டும் நடப்பதில்லையே ஏன் என்று தெரியுமா ? இதோ பார்ப்போம்.
ஐப்பசி மாதம் சதுர்த்தி அமாவாசை திதியில் தீபாவளிக்கு பிறகு வரக் கூடிய 6 நாட்களும் கந்த சஷ்டி பெருவிழாவாகும். கந்த சஷ்டி விரதமானது கடந்த நவம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இது முருகர் திருக்கல்யாணத்துடன் வரும் 8ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த 7 நாட்களும் முருகனுக்காக விரதத்தை பக்தர்கள் தொடங்கிவிட்டனர். பலர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கி விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நாட்களில் முருகனை எண்ணி வழிபட்டால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். இந்த கந்த சஷ்டி விரத நாளில் முருகனின் பாடல்களை பாடி முருகனை தொழுவது வழக்கம். சஷ்டி விரதத்தின் நிறைவு நாளில் முருக பக்தர்கள் உணவு, நீர் இன்றி மிக தீவிரமாக விரதமிருந்து அன்று மாலை நிகழும் சூரசம்ஹார நிகழ்வை கண்டு களிப்பர். அப்போது பக்தர்களின் துன்பங்கள் நீங்கி மன உறுதி கிடைக்கும் என்பது ஐதீகம். மறுநாள் முருகன் தெய்வானை திருமண நிகழ்வை கண் குளிர பார்க்கும் பக்தர்கள் தங்கள் விரதத்தை முடிப்பர். இந்த கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளிலும் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் முருகனின் 5ஆம் படைவீட்டான திருத்தணியில் மட்டும் இந்த விழா நடைபெறாமல் அமைதியாக இருக்கும் ஏன் தெரியுமா? முருகன் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம் திருத்தணி. தணிகை என்றாலே கோபம் தணிதல் என்று அர்த்தம்.
திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகிறார். இதனால் இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவது இல்லை. இருந்தாலும் கந்த சஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது. அது போல் வள்ளித் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை கண் குளிர பார்த்தால் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறுமாம்.