உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் பல நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருவதை ஒட்டி, ராமர் அவதரித்த பூமியான அயோத்தி நகரமே கோலாகலமாக மாறி உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளனர்.
பிரம்மாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடக்கிறது. உயிர் கொடுத்தல் மூச்சு வழங்கள் என அர்த்தம் கொள்ளலாம்.
கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடி உள்ள திரை அகற்றப்பட்டு விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சகட்ட சம்பிரதாயம் இது.
மதியம் 12:30 மணி முதல் 1 மணி வரை பிராண பிரதிஷ்டை நடக்க உள்ளது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு இடைவெளிக்கு பின்பு ராமர் தனது பிறந்து வீட்டுக்கு வந்து விட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாட நாட்டு மக்கள் அனைவரும் இன்று மாலை வீடுகளுக்கு முன்பு 5 அகல்விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடிந்து கோவில் திறக்கப்படுவதால் மக்களிடம் உற்சாகம் பொங்குகிறது எங்கு பார்த்தாலும் ராமர் குறித்தும் அயோத்தி கோவில் குறித்தும் பேசப்படுகிறது. ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமே இன்று இந்தியா முழுவதும் எல்லோருடைய மனங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் என 13 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.