சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாலும் பக்தர்களை போலீஸார் தாக்குவதாலும் பலர் எரிமேலியிலேயே விரதத்தை முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குருசாமிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
சபரிமலையில் கார்த்திகை மாதம் மண்டல பூஜை தொடங்கியதிலிருந்தே அங்கு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உள்பட சில பக்தர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்வம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அங்கு பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பம்பை, மரக்கூட்டம், 18ஆம் படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் வயதானவர்களும், இணை நோய் உள்ளவர்களும் சிறுவர் சிறுமிகளும் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இதனால் பக்தர்கள் ஐயப்பன் சன்னிதிக்கு செல்லாமல் ஐயப்பன் பிறந்த இடமான பந்தல அரண்மனையில் இருமுடியை கழற்றி வைத்து விரதத்தை முடித்து வைத்துவிட்டு ஊர் திரும்பினார்கள். இதையடுத்து நீதிமன்றமும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில் தேவஸ்வம் போர்டு அமைச்சர் சபரிமலைக்கு சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்.
இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் வரலாறு காணாத அளவுக்கு மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பக்தர்களை அடைத்து வைத்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றே காக்க வைப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பக்தர்களை மலை ஏற விடாமல் மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதாகவும் ஒரு இடத்தில் பக்தர்கள் குவிக்க வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தயானந்த் என்பவர் 18 படியில் ஏற முயன்ற போது அவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் பம்பையில் இருந்து கன்னிமூல கணபதி கோயிலுக்கு வரை 6 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் அங்கு பணியில் இருந்த காவலர்களும் அவர்களை ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
சபரிமலைக்கு எதற்காக வருகிறீர்கள், உங்கள் ஊருக்கு போங்க என காவலர்கள் பேசுகிறார்களாம். இதனால் மனமுடைந்த அந்த பக்தர்கள் பம்பையிலிருந்து கிளம்பி எரிமேலியில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் இருமுடியை கழற்றி விரதத்தை பக்தர்கள் முடிக்கிறார்கள். காவல் துறை கெடுபிடி காரணமாக ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாமல் திரும்புவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.