சங்கரன்கோவிலில் மூலவர் சிவபெருமானை சூரியன் வழிபடும் நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மாள் ஆகிய மூன்று சன்னதிகள் அமைந்துள்ளது. கடந்த 1022 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன.
இங்கு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியன் உதித்தவுடன், சூரிய ஒளி பக்தர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீளவாக்கில் சென்று சிவலிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி, சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்க திருமேனி முழுவதும் பரவும் சில சமயம் நான்கு நாட்கள் கூட விழும்.
இது போன்ற அற்புதம் நிகழும் கோவில்கள் தமிழ்நாட்டில் சில உள்ளன. இது சூரியன் சிவபெருமானை தரிசனம் செய்வதாக ஐதீகம் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நேற்று சூரிய ஒளி சிவபெருமான் மீது விழும் நிகழ்வு நடந்தது. அப்போது கோவிலில் உள்ள மின்விளக்குகள் அடைக்கப்பட்டு சூரியன் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். இந்த நேரத்தில் சங்கரலிங்க சுவாமிக்கும் சங்கரலிங்க சுவாமி சன்னதியில் வீற்றிருக்கும் சூரிய பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.