திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் சனி பகவான் இடம் பெயர்ந்தார்
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சனிபகவான் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5.22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். அப்போது சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,மகாதீபாராதனை விமரிசையாக நடைபெற்றது.
உற்சவர் சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி ஆலய வெளிப்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,அமைச்சர்கள் கமலக்கண்ணன்,கந்தசாமி,தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள்,மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா,ஆலய நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்தனர். வெப்ப பரிசோதனையைத் தொடர்ந்து,கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.