தமிழர் திருநாளான தைப்பொங்கல் மற்றும் தைப்பூச திருநாட்களில் கோவில்களில் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் இறை வழிபாடுகளை செய்ய தமிழக முதல்வர் உரிய அனுமதி வழங்கிடவேண்டுமென சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமி "சற்குரு சீனிவாச சித்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுறுப்பதாவது; உலக நாடுகளை கடந்த காலங்களில் அச்சுறுத்திய கொரோனா தற்போது மீண்டும் 3வது அலையாக உருமாறி ஒமிக்ரான் என்ற வகை வைரஸ் தாக்கம் இப்போது நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் மீண்டும் பரவாமல் தடுத்திட கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு இந்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மக்கள் இறை வழிபாடு செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்திட இரண்டு தவணை தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி, அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தகுந்த மருத்துவ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தாலும், நோயின் தாக்கம் தீர இறைவனின் கருணையும் கண்டிப்பாக வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் பாரம்பரியம்மிக்க தமிழர் திருநாளான தைப்பொங்கல், உழவர் திருநாள், கானும் பொங்கல் மற்றும் ஆன்மிக சிறப்புமிக்க தைப்பூச திருநாட்களில் பக்தர்கள் இந்து கோவில்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை மதவழிபாட்டு தலங்களுக்கு செல்ல, தமிழக அரசு திடீரென தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஆகம விதிகளின் அடிப்படையில் இது ஒருபோதும் சரியானதல்ல. தைத்திருநாள் மற்றும் தைப்பூச திருநாட்களில் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட ஆன்மிக சிறப்புபெற்ற முருகன் கோவில்களுக்கு ஏற்கனவே மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வழிபாடுகளை நிவர்த்தி செய்திட வருவது வழக்கமாகும்.
எனவே, மேற்கண்ட நாட்களில் கோவில்களில் பக்தர்கள் கடந்த காலங்களை போன்று தடை ஏதும் இன்றி இறை வழிபாடு செய்திடவேண்டியது மிகவும் அவசியமாகும்.
எனவே, கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும், முககவசம் அணிந்து வரவேண்டும், குறிப்பிட்டபடி சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இறை வழிபாடு செய்வதற்கு கண்டிப்பாக அனுமதி வழங்கிடவேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து இந்து கோவில்களிலும் இறைவனுக்குரிய பூஜைகள் பக்தர்களின் பங்கேற்புடன் சரியான முறையில் தவறாமல் நடந்திடவேண்டும்.
இதில், பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பங்கேற்று, தங்களது இறை வழிபாடுகளை வேண்டுதல்படி நிறைவு செய்திட ஏதுவாக ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவினை தமிழக முதல்வர் கருணையோடு ரத்து செய்து, பக்தர்கள் தடையின்றி இறைவழிபாடு செய்வதற்கு உரிய அனுமதி வழங்கிடவேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.