திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 2-ம் நாள் திருவிழா முதல் 5-ம் நாள் திருவிழா வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவில் முக்கிய விழாக்களான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.
விழாவில் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று நடைப்பெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது.
அதனையடுத்து மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சூரசம்ஹார நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், சுவாமியை தரிசிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
நாளைய தினம் பிற்பகல் 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், சுவாமியை தரிசிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் வரும் வழியில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா முடிந்த பின்னர் வருகிற 11ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.