• vilasalnews@gmail.com

கணங்களின் அதிபதி கணபதி

  • Share on

நாயகன் என்ற ஒரு சொல் அதிபதி, தலைவன், உடையவன், மையமானவன், ஆகிய அனைத்து பொருட்களையும் குறிக்கும். தன்னிலும் தலைமகன் இல்லாத தலைவன் என்பதால் விநாயகன் என்ற பெயர் உண்டு. 

விக்னகங்களை (இடையூறுகளை) நீக்குவதால் விக்னேஸ்வரன் என்றும் கூறப்படுகிறார். இதேபோன்று விநாயகருக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. எந்த ஒரு தொழில்கள், சுப நிகழ்ச்சிகள், குடும்ப விசேஷங்கள்,  ஹோமம், யாகம், என எதை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வழிபட்டு தொடங்குவது வழக்கம். 

ஆதிசங்கரர் கணபதி வழிபாட்டை நெறிமுறைப்படுத்தியவர். பரஞ்சோதி தமிழ்நாட்டில் கணபதி வழிபாடு பரவ காரணமாக இருந்தார். சாளுக்கியப் படைகள் மீது பல்லவ படைகள் போர் தொடுக்க வாதாபிக் கோட்டையை முற்றுகையிட்டனர். பரஞ்சோதி வாதாபிக் கோட்டையின் பிரதான வாசலின் முன்பு வந்ததும் நின்றார். வாதாபிக் கோட்டையின் உச்சியில் ஒரு வினோத வடிவம் அவரை ஈர்த்தது. தன் வீரர்களிடம் அது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த வீரன் அது கணபதி விக்ரகம். அது இந்த கோட்டையின் காவல் தெய்வம் என்றான். உடனே அவர் மனதில் ஒரு சிந்தனை ஏற்பட்டது.

பாரதப் போருக்கு சென்றபோது தருமன் எதிரி படையில் இருந்த பீஷ்மர், துரோணர், போன்றவர்களிடம் அனுமதி வேண்டினார். இலங்கைப் போருக்கு முன்பாக ராமர் சூரிய பகவானிடம் அனுமதி பெற்றார். இருவரும் ஆசியும் அனுமதியும் தர்மத்தின் பெயரால் பெற்றனர். உடனே பரஞ்சோதி, கணபதி முன் தொலைவில் நின்று கண்மூடி வாதாபி கணபதி பெருமானே அநீதிகளுக்காக பழிதீர்க்க நாங்கள் போரிடுகிறோம். தர்மம் எங்களிடம் உள்ளது என்று கருதினால் எங்களுக்கு வெற்றியை அருள்வீராக என்று வேண்டினார்.

அப்படி வெற்றி பெற்றால் போர் முடிந்த பின்னர் உங்களை எடுத்து சென்று தமிழ்நாட்டில் வைத்து பிரதிஷ்டை செய்து வருகிறோம் இது சத்தியம் என்றார். பின்னர் கடும் போர் தொடுத்து வெற்றியும் பெற்றார். சாளுக்கியப் படைகள் அடியோடு அழிந்து, புலிகேசியும் கொல்லப்பட்டார். போர் முடிந்ததும் பரஞ்சோதி கணபதி விக்ரகத்தை தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடிக்கு கொண்டு சென்று ஒரு கோயிலை எழுப்பினார். இப்போது அந்த ஊர் "பிள்ளையார்பட்டி" என அழைக்கப்படுகிறது.

பரஞ்சோதிக்கு அருள் புரிந்ததால் பரஞ்சோதி விநாயகர் என்றும் கேட்டதை கொடுத்ததால் கற்பக விநாயகர் என்றும் பல பெயர்களால் அங்குள்ள விநாயகர் போற்றப்படுகிறார்.தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் விநாயகர் வழிபாடு பரவியுள்ளது. எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் முன்பும் விநாயகர் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோயில்களுக்கு சென்றால் கூட முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே இதர வழிபாடுகளை தொடங்குவோம்.

அரிசி மாவு, மஞ்சள், செம்மண், பசுஞ்சாணம் என்று எது கிடைக்கிறதோ அதை வைத்து பிள்ளையார் பிடித்து பூஜை செய்து விடலாம். பிறவியிலேயே வாய் பேச முடியாமல் ஊமையாய் பிறந்தவர் நம்பியாண்டார் நம்பி. சிறு வயதிலிருந்து அவர் ஊரில் உள்ள விநாயகரை வலம் வந்து அவர் அருளால் பேசும் திறன் பெற்றவர். எனவே இவரை "பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்ற திருநாரையூர் நம்பி" என்று வரலாறு குறிப்பிடுகிறது.

கணபதி வழிபாட்டில் முதலிடம் வகிப்பது மகாராஷ்டிர மாநிலம் தான். ஸ்வஸ்திக் எனப்படும் சின்னம் விநாயகரின் சின்னமாகும். ஓம் எனப்படும் பிரணவ சொல்லின் உருவம் என்பர். விநாயகர் வழிபாட்டில் பல வகைகள் உள்ளன. பொன், வெள்ளி, செம்பு, கருங்கல் இவற்றால் ஆன வடிவங்கள் ஆராதனைகளுக்கு ஏற்றவை. மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் ஆனவை வழிபட்ட பின்னர் நீரில் இட வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ ஆகியவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். 

விநாயகர் இன்னல் நீக்கும் இறைவன் என வேதங்களாலே போற்றப்பட்டவர். ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரம், வளர்பிறை நான்காம் (சதுர்த்தி) நாள் அன்று விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஆண்டுதோறும் இந்த தினம் விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி "சங்கடஹர சதுர்த்தி" எனப்படுகிறது. 

இப்படி ஏராளமான கதைகள் இந்த முழுமுதற் கடவுள் கணபதியைப் பற்றி உண்டு.இந்த காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு தொடங்குவதே வழக்கமாக இருந்து வருகிறது. அதே போல நாமும் முதல் தொகுப்பினை விநாயகருக்கு அர்ப்பணிக்கிறோம்.

  • Share on

இன்றைய ராசி பலன் - ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11, 2021

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை ஜூலை 12, 2021

  • Share on