கீதையில் குழம்பிய மனத்துடன் நின்ற அர்ஜுனனை தெளிவிக்க வாழ்வின் அனைத்து உண்மைகளையும் போதிக்கிறார் கிருஷ்ணர் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என அனைத்தையும் உபதேசித்தவர் "தர்மம்" என்பதற்கு மட்டும் இதுதான் தர்மம் என்று திட்டவட்டமாகக் கூற வில்லை.
"தர்மம்" என்பது என்ன என்று அர்ஜுனன் கேட்டதற்கு கிருஷ்ணன் இவ்வாறு பதிலளிக்கிறார்
" அர்ஜுனா! இதுதான் தர்மம் என்று அதை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எல்லைக்குள் வகுத்துவிட முடியாது. தர்மத்தின் பாதை, தோற்றமானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுபடக்கூடியது. மனிதன் தனது உள்ளுணர்வின் துணை கொண்டுதான் எது தர்மம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று பதிலளிக்கிறார் கிருஷ்ணர்.
"தர்மம் மனிதனைக் காக்கும்" இது பழமொழி. அதேசமயம் தர்மத்தை யார் காப்பது? என்ற கேள்வியும் பிறக்கிறது. தர்மத்தை மனிதன் தான் காக்க வேண்டும் இது நீதி. இங்கே தர்மமும் மனிதமும் ஒன்றை ஒன்று சார்ந்தே காணப்படுகின்றன.
தர்மத்திலும் இரண்டு வகைகள் உண்டு. தானம் என்பதும் தர்மமே. அறநெறி என்பதும் தர்மமே.
நோய் தீர்க்கும் மருந்துகள் உயர்ந்ததா? நோய் வராமல் காப்பது சிறந்ததா? பகைவரை அழிக்கும் ராணுவம் முக்கியமா? பகைமை ஏற்படாமல் தடுக்கும் ராஜதந்திரம் முக்கியமா? இரண்டுமே தேவைதான். பகை ஏற்படாமல் சாதூர்யமாக சமாளிக்கும் இராஜதந்திரிகளும் நாட்டிற்கு முக்கியம், அதையும் மீறி பகைமை வந்துவிட்டால் முடிவெடுக்கும் ராணுவமும் தேசத்திற்கு முக்கியமானதுதான். நோய் வராமல் தடுப்பது முக்கியம், மீறி நோய் வந்துவிட்டால் காக்கும் மருந்துகளும் முக்கியம்.
கர்ணனின் அள்ளி வழங்கும் தருமமும் முக்கியம் யுதிஷ்டிரனின் அவரவருக்கு உரியதை இம்மி பிசகாமல் நடுநிலையில் நின்று வழங்கும் தர்ம நீதியும் முக்கியம்.
தர்மத்தை நாம் கடைபிடித்தால் தர்மம் நம்மைக் காக்கும். தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது நம் கடமை. நமக்கு அரணாக இருந்து நம்மை காப்பது அதன் கடமை.
ஆக தர்மம் தான் மனிதனைக் காக்கும் தர்மத்திலிருந்து தவறினால் அந்த தர்மமே மனிதனை கொல்லும். தர்மம் கொள்வோம் மனிதம் வெல்வோம்!