கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை போதிய அளவில் கையிருப்பு வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கறுப்பு பூஞ்சை நோய் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் அதனை சமாளிப்பது, அரசுக்கு பெரும் சவாலாகிவிடும். எனவே கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்து கொள்ளப் படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்நோயினை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பிட்டு திட்டத்தில் சேர்த்திடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறுப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்துகள் இல்லை. எனவே போதிய மருந்துகள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.