அதிமுக கட்சி அலுவலகம் கட்டுவதற்கு வாங்கிய இடத்தை காணவில்லை என்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், அதிமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சி அலுவலகம் கட்ட தலைமை உத்தரவிட்டதால், 2012ல் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதிமுகவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் மூலம் நிலத்தின் உரிமையாளரிடம் 27 சென்ட் நிலம் ரூ.1 கோடியே 60 லட்சம் என பேசி முடிக்கப்பட்டது. அப்போது மாவட்ட அமைச்சராக இருந்தவர் மூலம், 2012ல் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த ஆனிமுத்துவிடம் கட்சிக்கான இடம் வாங்க ஒரு கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரூ.90 லட்சம் நிலத்தின் உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் முழு பணமும் செட்டில் பண்ணாததால் பத்திரம் போட்டு, பட்டா மாறுதல் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்டச் செயலாளர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டனர். 2016ல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, முன்னாள் அமைச்சரும், தற்போதைய ராமநாதபுரம் எம்எல்ஏவுமான மணிகண்டன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு 3 மாதங்கள் இருந்தார். அதற்கு பிறகு அவரும் மாற்றப்பட்டு 4 வருடங்களுக்கு மேலாக பரமக்குடி முனியசாமி மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். 5 வருடங்களுக்கு மேலாக அதிமுக சார்பில் முழு பணமும் கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அந்த இடத்திற்கு மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சென்ட் ரூ.13 லட்சம் என விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போதைய நிர்வாகிகள் மீது சந்தேகப்பட்டு அவர்களை கைது செய்யக் கோரி அதிமுக தொண்டர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஓட்டியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
போஸ்டரில், ‘‘கட்சி அலுவலகம் கட்ட வாங்கிய இடம் எங்கே? கட்சி இடத்தை விற்று பணத்தை கையாடல் செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடு - இவண் உண்மை தொண்டர்கள் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக’’ என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் சினிமா படம் ஒன்றில் கிணற்றை காணவில்லை என நகைச்சுவை நடிகர் வடிவேல் கூறுவது போன்று மீம்ஸ்களை உருவாக்கி இந்த போஸ்டருடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு டிரெண்டிங் ஆகி வருகிறது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பரமக்குடி சுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘ராமநாதபுரத்தில் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக நிலம் வாங்குவதற்கு முன்பணம் கொடுத்தது உண்மை. ஆனால் அப்போது போதிய பணம் இன்றி பத்திரம் போடாமல் கிடப்பில் போடப்பட்டது. மாவட்டச் செயலாளர் பதவியில் அடுத்தடுத்த மாற்றங்கள் வந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஒரு தரப்பு புகார் கூறியுள்ளது. எனக்கும் அதுகுறித்த உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கட்சி தலைமைக்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர். கட்சி தலைமை சார்பில் என்னிடம் விசாரிக்கப்பட்டால் உண்மையை சொல்வேன்’’ என்றார்