மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த தலைவர்களான மகேந்திரன், பொன்ராஜ் விலகலை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு விலகியுள்ளார். அது போல் சுற்றுச்சூழல் பிரிவு மாநில பொறுப்பாளர் பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்டது. இந்த கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சொல்லிக் கொள்ளும்படியான வாக்குச் சதவீதத்தை எடுத்தது.
இதையடுத்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. இதில் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கமல் கூட்டணி அமைத்திருந்தார். இக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 3 அல்லது 4 ஆவது இடத்தை பிடித்திருந்தனர்.
ஒருவரும் வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கமலும் தோல்வி அடைந்தார். இதையடுத்து தோல்விக்கான காரணத்தை அறிய வேட்பாளர்களுடன் சென்னையில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் அனைத்து பொறுப்பு களிலிருந்து மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு விலகினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சந்தோஷ்பாபு வெளியேறாமல் கமலுடன் நான் இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்.
பொதுச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். எனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். என் மீது அன்பும் நட்பும் காட்டிய கமல்ஹாசன் சார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் மநீம கட்சியில் இணைந்தார் சந்தோஷ் பாபு.
இவரைத் தொடர்ந்து மதுரவாயல் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தமிழச்சி பத்மப்ரியாவும் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சுற்றுச்சூழல் பிரிவு மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் நிறைய யோசனைகள் இருந்தன. தற்போது அப்பதவியிலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன். கமல்ஹாசனுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.