நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் வென்றதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளதுதான் தமிழர் பண்பாடு என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக சார்பில் தேர்தலில் வென்று தற்போது நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு நிதித் துறை கொடுக்கப்பட்டது சிறப்பானது என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
அது போல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு பழ நெடுமாறன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில் பழ நெடுமாறன் குறிப்பிடுகையில் அன்புள்ள நண்பருக்கு, வணக்கம், தங்களது பாட்டனார் தமிழ்வேள் பி டி ராசன் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த தாங்கள் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதை வரவேற்று பாராட்டி வாழ்த்துகிறேன்.
தமிழகத்தின் வரலாற்றில் நிதித் துறையில் திறமை வாய்ந்த ஒருவர் இப்பதவியில் நியமிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். நீங்கள் இப்பதவியை ஏற்றிருப்பதன் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமையைச் சீராக்கி வளம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்களை மீண்டும் வாழ்த்துகிறேன் என வாழ்த்துச் செய்தியில் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அனுப்பியுள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் பழ.நெடுமாறன் அவர்களின் வாழ்த்து மடலை மிக்க நன்றியுடன் பெற்றேன். இதே தொகுதியில் அவர் எனது தந்தையை எதிர்த்து போட்டியிட்டு 1980ல் வென்றவர்.
அந்தத் தேர்தலில் என் தந்தையை முன்மொழிந்தது அவரது தந்தை பழனியப்பன் ஆவார். இப்போது நான் வென்றதற்கு வாழ்த்து அனுப்பியுள்ளார். இதுதான் தமிழர் பண்பாடு என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.