• vilasalnews@gmail.com

"ஆபரேஷன் தமிழ்நாடு".. வந்த வேலையை கச்சிதமாக முடித்த அமித் ஷா!

  • Share on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று எதற்காக தமிழகத்திற்கு வந்தாரோ அந்த வேலையை கச்சிதமான முடித்துவிட்டு சென்று இருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதியம் சென்னைக்கு வந்து இருந்தார். 2021 சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. திமுக இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே '' விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்'' பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

இன்னொரு பக்கம் அதிமுகவும் கட்சி கூட்டத்தை நடத்தி, தேர்தலுக்கு வியக்கங்களை வகுக்க தொடங்கி விட்டது. இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தார்.

நேற்று தமிழகம் வந்த அமித் ஷாவின் பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றிப்பயணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை மூலம் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ள பாஜகவிற்கு அமித் ஷா வருகைப் பெரிய அளவில் ஊக்கம் அளித்துள்ளது என்கிறார்கள். அதிலும் அமித் ஷா செய்த சில ''சம்பவங்கள்'' பாஜகவிற்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

நேற்று அமித் ஷாவை வரவேற்பதற்காக சென்னையில் பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. பாஜக கூட்டத்தை விட அதிமுகவினர் கூட்டம் அதிகமாக சாலையில் காணப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை, அதிலும் மாநில கட்சியான அதிமுக இவ்வளவு பெரிய வரவேற்பை கொடுப்பது எல்லாம் மிகப்பெரிய விஷயம். இங்கேயே அமித் ஷாவின் முக்கியத்துவம் என்ன என்ற மெசேஜ் தமிழக கட்சிகளுக்கு அனுப்பட்டுவிட்டது.

அமித் ஷா வருகையின் மிகப்பெரிய சாதனை என்றால் அது அதிமுக கூட்டணியை உறுதி செய்ததுதான். கடந்த சில வாரங்களாக அதிமுக - பாஜக உறவில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. அதிலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின், பாஜக அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்றெல்லாம் கூட கேள்விகள் எழுந்தது.

ஆனால் அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கும். இரண்டு கட்சிகளும் ஒன்றாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் என்று அதிரடியாக அமித் ஷா அறிவித்துவிட்டார். முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் அமித் ஷாவை புகழ்ந்து பேசி, கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டனர். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி சட்டசபை தேர்தலில் உறுதியாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் தேர்தல் கூட்டணியை உறுதி செய்தவர், இன்னொரு பக்கம் திமுகவிற்கு வார்னிங் கொடுத்துவிட்டார். சென்னைக்கு நீண்ட நாட்களுக்கு பின் வந்து இருக்கிறேன். அதனால் அரசியல் பேச போகிறேன் என்று கூறியவர், குடும்ப அரசியல், ஊழல், காங்கிரஸ் கூட்டணி, மீனவ பிரச்சனை, தமிழகத்திற்கு செய்த நலத்திட்டங்கள் என்று அதிரடியாக பட்டியலிட்டு அசத்திவிட்டார்.

திமுகதான் ஒரே டார்கெட். தேர்தல் நேரத்தில் கூட்டணி கணக்குகள் மாற வாய்ப்பு இல்லை என்பதையும் சூசகமாக தெரிவித்துவிட்டார். 2ஜி, ஊழல் குறித்தெல்லாம் பேசி சில திமுக தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை குறி வைத்துதான் அமித் ஷாவின் இந்த பயணம் அமைந்தது என்றும் கூட கூறுகிறார்கள். இதெல்லாம் போக நேற்று சென்னையில் நிறைய நலத்திட்டங்களை அறிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி பல நலத்திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் தமிழக அரசியலில் அமித் ஷாவின் ஆட்டம் தொடங்கிவிட்டது என்று கூறுகிறார்கள். மேற்கு வங்கத்தில் ''ஆபரேஷன் WB'' என்று அமித் ஷா தீவிரமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். தமிழகத்திலும் இதேபோல் ஆபரேஷன் தமிழ்நாட்டிற்கான விதை நேற்று வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது.

  • Share on

`மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்!’ -அமித்ஷா வருகை குறித்து துரைமுருகன்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடங்கியது!

  • Share on