• vilasalnews@gmail.com

ஸ்டாலின் அமைச்சரவையை அலங்கரித்த முத்துநகர் முத்து!

  • Share on

தூத்துக்குடி திமுகவில் 30 ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராக கோலோச்சிய பெரியசாமியின் மகள்தான் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, ஸ்டாலின் அமைச்சரவையை அலங்கரித்த முத்துநகரின் முத்தான கீதா ஜீவன்.

தூத்துக்குடி திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் கீதா ஜீவன், எம்.காம் பி.எட் படித்தவர். கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கீதா நர்ஸரி, தங்கம்மாள் பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

தந்தையின் செல்வாக்கால், 1996 முதல் மாவட்ட மகளிரணியில் பதவி, 2011 -ல் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், 2017 ஜூன் முதல் தூத்துக்குடி மாவட்ட திமுக பொறுப்பாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், 2001 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எனக் கட்சியில் கிடு கிடு வளர்ச்சியை எட்டியவர்.

2006 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, தனக்கும் சீட் கேட்டார். மகளுக்கும் கேட்டார் பெரியசாமி. இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு எனக் கட்சித் தலைமை சொல்ல, மகளுக்கு விட்டுத் தந்தார் பெரியசாமி.

அந்த விட்டுக்கொடுத்தலுக்குக் காரணம், வென்றால் மகள் அமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கைதான். அது வீண் போகவில்லை. பெரியசாமியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. அந்தத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற கீதா ஜீவன், 2006 - 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கீதா ஜீவன் மேடை ஏறிவிட்டால், திமுக அரசின் சாதனைகள், நலத்திட்ட உதவிகள் என அத்தனையையும் மடமடவென மனப்பாடமாகச் சொல்வதில் கில்லாடி.

ஒருமுறை இதை தூத்துக்குடியில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் நேரடியாகவே பார்த்துவிட்ட மறைந்த முன்னாள் அமைச்சரும் பொதுச் செயலாளருமான அன்பழகன், "தலைவர் பக்கத்துலயே இருந்து திட்டங்களை உருவாக்குற எங்களுக்கே அத்தனை திட்டங்களையும் வரிசையா சொல்ல முடியவில்லை. ஆனா, பெரியசாமியோட மகள், அத்தனையையும் ஒண்ணுவிடாம வரிசையா சொல்லி விடுகிறாரே!" எனப் புகழ்ந்ததுண்டு.

2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஜீவன் 88,045 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்லப்பாண்டியன் 67,137 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தொடர்ந்து 2021 தேர்தலிலும் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மீண்டும் அமைச்சராகியுள்ளார் முத்துநகரின் முத்தான கீதா ஜீவன்.

  • Share on

வெற்றியை நிர்ணயிக்கும் ‘அந்த 24 தொகுதிகள்’… பரபரப்பை கிளப்பும் பாண்டேவின் கணிப்பு!

தமிழகத்தில் திறமையான நிதி அமைச்சர் : பாராட்டிய பழ. நெடுமாறன்!

  • Share on