மதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவி, அங்கிருந்து திமுகவுக்கு தாவிய டாக்டர் சரவணன், மீண்டும் பாஜகவுக்கு தாவியிருக்கிறார்.
மதுரை நரிமேட்டில் ‘சரவணா மருத்துவமனை’ நடத்தி வரும் டாக்டர் சரவணன், ‘அகிலன்’ திரைப்படம் மூலமாக நடிகர் ஆனார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்த சரவணன், வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஆனார்.
இரண்டே வருடங்களில் மதிமுகவில் இருந்து விலகி, பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவுக்கு தாவினார். அங்கேயும் இரண்டு வருடங்கள்தான் இருந்தார். அங்கிருந்து திமுகவுக்கு தாவிவிட்டார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அவர் திருப்பரங்குன்றம் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அந்த தொகுதி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அதிருப்தியில் இருந்தார். ஆனாலும், திருமங்கலம் அல்லது மதுரை வடக்கு தொகுதியை கேட்டு எதிர்பார்த்திருந்தார். அதுவும் கிடைக்காததால் வேதனையில் இருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார்.