திருமங்கலம் தொகுதியில் எனது சொந்த முயற்சியில் ஏழை எளியோருக்கு அம்மா வீட்டுமனை திட்டம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்து பேசினார்.
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறவன்குளம் வையம்பட்டி தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, சிவன் நகர், காந்தி நகர், கப்பலூர், புளியங்குளம், விருச்சங்குளம், விடத்தகுளம், எட்டுநாளி, மைக்குடி, வடகரை, மேலக்கோட்டை உள்ளிட்ட 26 கிராமங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
முன்னதாக மறவன்குளத்தில் பெருமாள் கோயில், காளியம்மன் கோவில் வழிபாடு செய்து அதன் பின் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு வீட்டின் அருகே வாக்கு சேகரிக்கும் போது தேநீர் அருந்துமாறு அழைப்பு விட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார்.
எதிர்கட்சிகளின் திட்டம் எல்லாம் வெறும் அறிக்கை மட்டும் தான் என கூறி வந்த நிலையில் அவர் தேநீர் அருந்திய வீட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி யால் வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இருந்தது.
கலைஞர் டிவி சரியான முறையில் இயங்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.
மாற்றி மாற்றி குற்றம் சாட்டி னாலும் சமூக நீதி திட்டம் வழங்குவதில் திமுக அதிமுக ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை தானே.