‘‘ஜெயலலிதா இஸ் கமாண்டர் அண்ட் கமாண்ட்டபுல் லீடர். அவரது நிர்வாகத் திறமையோடு எடப்பாடியை ஒப்பிடாதீர்கள்’’ என்கிறார், துரைமுருகன்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், ‘
‘தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்’ என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நலிந்த பிரிவினருக்கு இதுபோன்ற உதவியை அரசுதான் முன்வந்து செய்ய வேண்டும்.
ஆனால், அதைப்பற்றியெல்லாம் இந்த அரசுக்கு கவலையில்லை. அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்க்கட்சியாக இருக்கிற தி.மு கழகத்தின் தலைவர் செய்தி ருக்கிறார் என்பதுதான் அரசியல் உலகில் விசித்திரம். 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கிடைப்பதற்கு முழு முயற்சி எடுத்ததும் தி.மு.க என்றால் மிகையாகாது.
‘அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10 சதவிகிதம் உள்ளீடு ஒதுக்கலாம்’ என்று நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், ஆட்சியாளர்களோ 7.5 சதவிகிதம் என்று தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினார்கள். கவர்னரோ அந்த தீர்மானத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இந்த நீட் விவகாரமும் அப்படித்தான். முன்னொரு காலத்தில், நீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாபதிக்கு அனுப்பியுள்ளோம் என்றார்கள். கடைசியில், ‘அந்த மாதிரியான தீர்மானமே எனக்கு வரவில்லை’ என்றார் ஜனாபதி. இறுதியாக, சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளருடைய பீரோவில் கிடந்தது அந்த தீர்மானம்.
இதையடுத்து, கவர்னர் மாளிகைக்கு முன்பு ஸ்டாலின் தலைமையில் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதன்பின்னரே, கவர்னர் உள்ஒதுக்கீட்டு தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்’’ என்றவரிடம்,
‘‘கூட்டம் கூட்டியதாக உதயநிதியை கைதுசெய்துள்ள தமிழக அரசு.. அமித் ஷாவுக்கு மட்டும் இன்று சிறப்பான வரவேற்பு அளித்துள்ளதே.. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
சத்தமாக கலகலவென சிரித்த துரைமுருகன், ‘‘உதயநிதியை விட்டிருந்தா.. அவர் பாட்டுக்கு ரெண்டு ஊருக்குப் போயிட்டு அப்படியே போயிருப்பாரு. கைது பண்ணி அவரை ஹீரோவாக்கி ட்டாங்க. தம்பி உதயா போற இடத்துல மட்டும்தான் கூட்டம் சேருகிறதா? உதயா போற இடத்துல மட்டும்தான் கொரோனா வருகிறதா? எடப்பாடி போற இடத்தில் கொரோனா வருவதில்லையா? நல்ல ஆட்சிக்கு இது நல்லது அல்ல.
அமித் ஷா உள்துறை மந்திரி. இந்தியா முழுவதும் போக அவருக்கு உரிமை இருக்கிறது. அவரது வருகை குறித்து பத்திரிகைகள்தான் என்னனமோ எழுதுகிறது’’ என்று சிரித்தவர்...
‘‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’’ என்று உதயநிதி கைது குறித்தும், அமித் ஷா வருகை குறித்தும் கிண்டலடித்தார். அதே சமயம், ‘‘அமித் ஷா மீது பதாகை வீசப்பட்டது வரவேற்கத்தக்கது அல்ல’’ என்று கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ‘‘அழகிரி கட்சித் தொடக்கம் தி.மு.க-வுக்குப் பின்னடவை ஏற்படுத்துமா?’’ என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், " இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.
இறுதியாக, ‘‘ஜெயலலிதாவின் ஆளுமையையும், எடப்பாடியின் நிர்வாக ஆளுமையையும் எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்றும் நிருபர்கள் கேட்டனர்.
மீண்டும் கலகலவென சிரித்த துரைமுருகன், ‘‘ஜெயலலிதா இஸ் கமாண்டர் அண்ட் கமாண்ட்டபுல் லீடர். அவருடைய ஆளுமை வேறு. இவர்களெல்லாம் அவரது நிழல் அளவுக்கூட கிடையாது’’ என்றார்.