தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியாவதற்கு முன்பே, அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நல்ல நேரம் என்பது மட்டுமே இதற்கு காரணம் என்று அவர் விளக்கம் தந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, 20 தொகுதிகளில் களமிறங்குகிறது.
அதன்படி, 1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3.குளச்சல் 4. விளவன்காடு 5.ராமநாதபுரம் 6. மொடக்குறிச்சி 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு 9. திருக்கோவிலூர். 10.திட்டக்குடி, 11. கோயம்புத்தூர் (தெற்கு) 12. விருதுநகர். 13. அரவக்குறிச்சி. 14. திருவையாறு, 15.உதகமண்டலம் 16. திருநெல்வேலி 17. தளி 18. காரைக்குடி 19.தாராபுரம்(தனி) 20. மதுரை (வடக்கு) ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்னமும் வெளியாகவில்லை. பட்டியலுடன் டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல். முருகன், மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுக்கு பிறகு இன்றிரவு அல்லது நாளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில், இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளர் பட்டியலே வெளிவருவதற்கு முன் அவர் திருநெல்வேலியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். அதற்கு முன்பே வேட்பு மனுதாக்கல் செயததற்கு நல்ல நேரம் என்பது மட்டும்தான் காரணம். அதிமுகவினர் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவார்கள் என்றார்.