• vilasalnews@gmail.com

"3 விஷயங்களில்" கோட்டை விட்ட எடப்பாடியார்.. இதை மட்டும் செய்திருந்தால்.. திமுக வீக் ஆகியிருக்குமே

  • Share on

மொத்தம் 3 விஷயங்களில் எடப்பாடியார் கோட்டை விட்டுவிட்டாரோ? இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமோ? அப்படி கவனமாக இருந்திருந்தால், திமுகவை மெஜாரிட்டி இல்லாமல் ஈஸியாகவே காலி செய்திருக்கலாமோ? என்பன போன்ற விவாதங்கள் எழுந்து வருகின்றன.

ஒருவழியாக 3 மாத குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி உடன்பாடு, சீட் ஒதுக்கீடு, சமசர பேச்சுக்கள் போன்ற அரசியல் சம்பிரதாயங்கள் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டன.

பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட போகிறது... எனினும் இதை வைத்தே திமுகவை சமாளிக்க முடியுமா? ஓட்டு வங்கியை வீழ்த்த முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இது சம்பந்தமாக ஒருசில அரசியல் நோக்கர்களிடமும் பேசியபோது : 

'கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துவிடாமல் அவர்களை தக்க வைத்ததற்கு முதலில் எடப்பாடியாருக்கு சபாஷ் போடலாம்.. ராமதாஸ் ஒரு பக்கம், முருகன் மறுபக்கம் என அழுத்தம் தந்து கொண்டிருந்தாலும், அவர்களை பகைத்து கொள்ளாமல், கூட்டணிக்கும் பங்கம் வந்துவிடாமல், நாசூக்காக கையாண்டுள்ளார், மற்றொரு புறம் தொகுதிகளையும் ஓரளவு சாதகமாக ஒதுக்கி உள்ளார்.

ஆனால், ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் அந்தந்த கட்சிகளுக்கு சாதகமானதாக இல்லை. அதனால் இழுபறியும், பேச்சுவார்த்தையும் நடப்பதாக தெரிகிறது. எனினும், எடப்பாடியார் 3 விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.

முதலாவதாக, தினகரனை உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும்.. கட்சிக்குள் சசிகலாவுக்கு இடமில்லை என்று சொல்லி விட்டார்கள். அது உட்கட்சி பிரச்சனை. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் மட்டுமே சம்பந்தப்பட்டு முடிவெடுக்க வேண்டியது. அதனால், சசிகலா விஷயத்தை பெரிதாக்க தேவையில்லை. ஆனால், கூட்டணி என்று பார்த்தால், அதை பலப்படுத்த வேண்டியது அதிமுக தலைமைதான்.. அந்த வகையில் அமமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம். தென்மண்டலங்களை பற்றியும் கவலை இல்லாமல் இருந்திருக்கலாம்.

இரண்டாவது விஷயம், வன்னியர்கள் இடஒதுக்கீட்டு விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டார். வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக மற்ற சாதியினரின் அதிருப்தியை அறுவடை செய்யும் நிலை வந்துள்ளது. அருந்ததியர், வேளாளர், என தனித்தனியாக அந்தந்த சமூகத்தினருக்கு ஓரளவு திட்டங்களை செய்திருந்தாலும், வன்னியர் இடஒதுக்கீடு என்பது ரொம்ப பெரிய விஷயம். அதிலும் 10 சதவீதம் எல்லாம் ரொம்ப அதிகம். இந்த விஷயத்தில் தன்னிடம்கூட கலந்து விவாதிக்கவில்லை என்று ஓபிஎஸ்கூட வருத்தப்பட்டதாக தகவல்கள் வந்தன. அந்த வகையில் பாமகவை சரிக்கட்ட இந்த அளவுக்கு எடப்பாடியார் இறங்கி வந்திருக்க கூடாது.

மூன்றாவது விஷயம், விஜயகாந்த்தை எக்காரணம் கொண்டும் கைவிட்டிருக்க கூடாது. இவ்வளவு கெடுபிடிகளும் காட்டியிருக்க கூடாது. அவங்களுக்கு ஓட்டு வங்கி இருக்கா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவர்களுக்கு எந்த அளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக அதிமுகமீது வெறுப்பு ஓட்டுக்கள் வந்துவிடும்.. ஒரு கூட்டணியை சரிக்கட்ட தெரியவில்லையா? இத்தனை வருடம் கூடவே இருந்தவர்கள் மீது இந்த அளவுக்கு கறார் காட்ட வேண்டுமா? பாஜகவைவிட தமிழகம் முழுக்க பரவலாக தேமுதிகவுக்கு இருக்கும் மதிப்பை பற்றி யோசித்திருக்க வேண்டாமா? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.

அதாவது, ஒரு கூட்டணி கட்சி தலைமை என்பது இருப்பவர்களை கைவிட்டுவிடாமல், மேலும் சில கூட்டணிகளை உள்ளே இழுத்துவருவதில்தான் திறமையே அடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில் இரண்டுமே இல்லை. தேமுதிக வெளியேறியது மட்டுமில்லை, புதிய கட்சிகளையும் அதிமுக தலைமை உள்ளே கொண்டு வர முயற்சிக்கவில்லை. ஏசி சண்முகம் போட்டியிட போவதில்லை என்கிறார், ஜிகே வாசனும் வெளியேறி விடுவார் போல தெரிகிறது. இவர்களை எல்லாம் தக்க வைத்து கொள்ள வேண்டாமா?

அதுமட்டுமில்லை, கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தமீம் அன்சாரி, போன்ற அந்த 3 பேரும்கூட கூட்டணியில் இப்போது இல்லை.. அவ்வளவு ஏன் சரத்குமாரையும் கைவிட்டாச்சு. இதெல்லாம் சின்ன சின்ன கட்சிகள் என்றாலும், அந்தந்த கட்சிகளின் வாக்குகளும் முக்கியம்தானே? திமுக பலம் பொருந்தி இருக்கும்போது, அவைகளை சமாளிக்கவாவது இதையெல்லாம் அதிமுக தலைமை செய்திருக்கலாம். இப்போதும் ஒன்னும் கெட்டுப்போய்விடவில்லை.. ஜிகே வாசன், ஏசி சண்முகத்தை விட்டுவிடாமல் தடுக்கலாம்.. பாமக, பாஜகவுக்கு சாதமான தொகுதிகளை ஒதுக்கி அவர்களை குளிர வைக்கலாம்.

இந்த 4 ஆண்டுகாலத்தில் எடப்பாடியார் திறமையை நாடறியும். இன்று யாருக்கும் பயப்படாமல், யாருடைய அழுத்தத்துக்கும் பின்வாங்கிவிடாமல், துணிந்து பல தில் முடிவுகளை எடுத்து வருவதை மறுக்க முடியாது. எனினும் இந்த 3 விஷயங்களையும் சரிக்கட்டி இருந்தால், திமுக தலைதூக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்' என்றனர்.

  • Share on

அதற்குள் நன்றி கார்டு போட்ட குஷ்பு!

இஸ்லாமியர்களுக்கு 10% இட ஓதுக்கீடு , தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் கட்சிகளுக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு

  • Share on