ராஜபாளையம் தொகுதியை பாஜக சார்பில் கவுதமி எதிர்பார்த்திருந்து ஏமாந்தது போலவே, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று நினைத்திருந்ததால் அத்தொகுதியில் நடிகை குஷ்புவை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
குஷ்புவும் இத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார். திடீரென்று அத்தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலினும் விருப்பம் தெரிவித்ததால், போட்டி கடுமையானது. கடைசியில் அந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் குஷ்பு கடும் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.
‘’ஒரு உண்மையான தொண்டன் பதவியை எதிர்பார்க்க மாட்டான். நானும் அப்படித்தான் உழைத்து வந்தேன்.
கடை மட்டத்தில் இறங்கி உழைத்து வந்தேன். தொகுதி மக்கள் என் மீது காட்டிய அன்பு, பாசம் உண்மையானது. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் வேட்பாளர் என்று ஒருபோதும் நான் சொல்லிக்கொண்டதில்லை. கடந்த மூன்று மாதங்களும் அழகாக இருந்தன.
இத்தொகுதியில் இதுநாள் வரைக்கும் எனக்கு வாய்ப்பு தந்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழக தலைவர் எல்.முருகன் ஆகியோருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை ஒதுக்காவிட்டாலும், சென்னையில் துறைமுகம், ஆயிரம் விளக்கும் ஆகிய தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது அதிமுக. இதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை போட்டியிட வைக்கலாம். ஆனால் அங்கு ஒரு சிக்கல் இருக்கிறது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் கு.க.செல்வம். அவர் தற்போது பாஜக பக்கம் வந்திருக்கிறார். அதனால் அவருக்கே மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு தருமா? என்ற கேள்வியும் இருக்கிறது.
ஆயிரம் விளக்கில் குஷ்புவா? கு.க.செல்வமா? என்ற கேள்வியால் பாஜக வட்டாரம் பரபரப்பாக இருக்கிறது. ஆனால்., அதற்குள் குஷ்பு நன்றி கார்டு போட்டிருக்கிறார்.