கோவையில் அரசியல் கட்சி சின்னங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள சேலைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் தொண்டர்கள் தங்கள் கட்சி சின்னத்தைத் தெரியப்படுத்தும் விதமாக கரை வேட்டியுடன் பிசியாக வலம் வருகிறார்கள்.
பெண்கள் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்தும், மோதிரம், கம்மல், மூக்குத்தி அணிந்தும் ஒருபுறம் கலக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் உள்ள துணிக்கடைகளில் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட வேட்டி, சேலை, டி-சர்ட், குடை, தொப்பி, பேட்ஜ், பேனா உட்பட அனைத்துவிதமாக பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் பேசியபோது, “கடந்த 45 ஆண்டுகளாக கட்சி கொடி, வேட்டி, சேலைகளை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். தமிழகத்தைத் தவிர கேரளாவில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்தான் ஆர்டர்கள் குவியும். ஆனால், தற்போதே விற்பனை அதிகரித்து வருகிறது.
தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரம் செய்யும்போது வேட்டி, சேலைகள், கொடி, பேனர், குடை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகமாகும். தற்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் அடிக்கடி வருகிறார்கள். எனவே எதிர்பார்த்ததைவிட விற்பனை அதிகரித்துள்ளது.
ஒரு சேலையின் விலை ரூ.145-க்கும், ஒரு வேட்டியின் விலை ரூ.140-க்கும் விற்பனை செய்கிறோம். இந்த முறை பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினர்.