தொகுதி பங்கீடு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ளது. அவர்களாகவே விலக வேண்டும் என்பதுதான் அதிமுக கூட்டணி கட்சிகளின் மாஸ்டர் பிளானாக இருந்திருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது . வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியதால் குறைவான தொகுதிகளை பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
அதன்படி திருத்தணி, வேளச்சேரி, திருப்போரூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி ,ஆரணி , பென்னாகரம், வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், அணைக்கட்டு, ஓசூர், கலசபாக்கம், கும்மிடிபூண்டி, சங்கராபுரம் ,நெய்வேலி, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், திண்டிவனம், பண்ருட்டி ,மேட்டூர், ஜெயங்கொண்டம், ஆற்காடு உள்ளிட்ட 23 தொகுதிகளை பாமக கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன.
இதனிடையே கடந்த 5 ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களான மாம்பழம், இரட்டை இலை, தாமரை இடம்பெற்றிருந்த சூழலில், தேமுதிகவின் முரசு சின்னம் மட்டும் இடம்பெறவில்லை.
தொடக்கம் முதலே தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்காமல் இழுக்கடித்துவந்த அதிமுக இதையெல்லாம் திட்டமிட்டுதான் செய்ததோ என்ற சந்தேகம் எழுகிறது. 40 கேட்ட தேமுதிகவினருக்கு வெறும் 13 தொகுதிகளை ஒதுக்கி அலைக்கழித்துவந்தது.
இந்த திட்டங்கள் எல்லாம் பாமகவுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டதுபோலவும் தெரிகிறது. அதனால்தான் தேர்தல் அறிக்கையில் முரசு சின்னத்தை அவர்கள் அச்சிடவில்லை. ஆனால் இத்தனை நாட்களாக அதிமுகவினர் தேமுதிகவினருக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் போக்குக்காட்டிவந்துள்ளனர்.