திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி கட்சிகள் அறிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இணைந்து கடந்த முறை திருவாடானை தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாஸ். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக அழைப்புக்கு காத்திருந்த அவர், அழைப்பு வராததால் அக்கூட்டணியிலிருந்து விலகினார் கருணாஸ்.
எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார் என்று பகிரங்கமாக பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் சீட் எதிர்பார்த்த கருணாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதுடன், தொகுதி கேட்டு கருணாஸ் கட்சி கடிதம் அனுப்பியிருந்தது.ஆனால் இதுவரை திமுகவிடமிருந்து எந்த அழைப்பும் முக்குலத்தோர் படை கட்சிக்கு வரவில்லை.
இந்த சூழலில் சீட் ஒதுக்காததால் திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார். அத்துடன் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேற்று திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த நிலையில் சீட் ஒதுக்காததால், அவரது கட்சியும் தனது அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.