தமிழகத்தில் 2006 சட்டசபை தேர்தலின் போது நடந்த சம்பவங்கள் எல்லாம் மீண்டும் "ரிப்பீட்" ஆக தொடங்கி உள்ளன. அப்போது அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவியது போலவே இந்த முறையும் போட்டி நிலவுகிறது. 2006ல் திமுகவை சமாளிக்க ஜெயலலிதா எந்த அஸ்திரத்தை எடுத்தாரா அதே அஸ்திரத்தை தற்போது முதல்வர் இபிஎஸ் எடுத்துள்ளார்!
2006 சட்டசபை தேர்தலில் திமுக - அதிமுக இடையே கடுமையான வார்த்தை, அறிக்கை போர், வாக்குறுதி போர் நடந்து கொண்டு இருந்தது. திமுக, அதிமுக இரண்டும் சம பலத்தில் இருந்த சமயம். இப்போது இருந்தது போல சோஷியல் மீடியா மட்டுமே அப்போது தேர்தல் முடிவுகளை தீர்மானிக்காது.
இதனால் இரண்டு கட்சியும் தேர்தல் வாக்குறுதி மீது கவனம் செலுத்தின. தேர்தல் வாக்குறுதியை வைத்தும், இலவச அறிவிப்புகளை வைத்தும் இரண்டு கட்சிகளும் மக்களை கவர திட்டமிட்டது.
இதில், தொடக்கத்தில் அதிரடி காட்டிய திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதி இலவச டிவி , ஒரு கிலோ அரிசி 2 ரூபாய், 2 ஏக்கர் நிலம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு போட்டியாக அதிமுக அதிரடி அறிவிப்புகளை அடுக்கியது. அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திமுகவின் அறிவிப்புகளுக்கு போட்டியாக அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக அறிவிப்பதை விட கூடுதலாக திட்டங்களை, வாக்குறுதிகளை அதிமுக அளித்தது. ஆனால் அந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதன்பின் 2011லும் இதேபோல்தான் திமுக இலவச மிக்ஸி, ஃபேன் வழங்குவோம், திருமண உதவி திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதிமுக இதை பார்த்து ஒருபடி மேலே போய் அதிரடியாக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் , மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவோம் என்று அறிவித்தது.
அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கைதான் அப்போது அந்த கட்சியின் நாயகனாக இருந்தது. இதுபோக மின்வெட்டு, இலங்கை போர், 2ஜி என்று பல விஷயங்கள் திமுகவிற்கு எதிராக திரும்பி, அதிமுக இமாலய வெற்றியை பெற்றது. தற்போது 2006, 2011ல் அதிமுக என்ன யுக்தியை பயன்படுத்தியதோ அதே யுக்தியை முதல்வர் பழனிச்சாமி கையில் எடுத்துள்ளார்.
திமுக கொடுக்கும் அறிவிப்புகளை விட ஒருபடி மேலே போய் கூடுதல் வாக்குறுதிகளை கொடுப்பது, திமுக வாக்குறுதிகளை முன்கூட்டியே சட்டமாக்குவது என்று முதல்வர் இபிஎஸ் அதிரடி காட்டி வருகிறார். முன்னதாக விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் முதல்வர் இபிஎஸ் துரிதமாக செயல்பட்டு அதை சட்டசபையிலேயே அறிவித்து தள்ளுபடி செய்தார்.
இதுபோக குடும்ப தலைவிகளுக்கு திமுக 1000 ரூபாய் கொடுக்கும் என்று கூறியதை அடுத்து 1500 ரூபாய் கொடுப்போம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதோடு 6 சிலிண்டர்கள் இலவசமாக கொடுப்போம் என்றும் அறிவித்து இருக்கிறார். அதிமுகவின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில்,குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரே நாளில் திமுகவின் முக்கிய அறிவிப்பின் வலிமையை அதிமுக உடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். திமுக இந்த அறிவிப்பை வைத்து வாக்குகளை கவரலாம் என்று பெரிதும் நம்பியது. ஆனால் அதிமுக அதற்கு எதிராக அதிரடி வாக்குறுதியை கொடுத்து போக்கை தன் பக்கம் திருப்பி உள்ளது.
நீங்க என்ன கொடுப்பீங்களோ அதைவிட அதிகமாக நான் கொடுப்பேன் என்று முதல்வர் பழனிசாமி தற்போது ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டுகிறார். திமுக, அதிமுக இடையே நிலவும் இந்த போட்டி காரணமாக கண்டிப்பாக இந்த முறை இரண்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெரிய அளவில் இலவச அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.