தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைகூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் திமுக , அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சிக்கு மட்டும் இன்னும் தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு முடிவு எட்டப்படவில்லை. காரணம் 45 சீட்டுகள் வேண்டும் என ஆரம்பத்தில் கூறி வந்த தேமுதிக, தற்போது 23 சீட்டுகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்தால் போதும் என்று இறங்கி வந்துள்ளது.
ஆனால் தேமுதிகவுக்கு முன்பு இருந்தது போல் இருந்தது போல மவுசு இல்லை என்று கூறியுள்ள அதிமுக அவர்களுக்கு 13 தொகுதிகள் அளிப்பதாகவும், இல்லையென்றால் கூட்டணியிலிருந்து விலகி கொள்ளட்டும் என்பது போல கறாராக கூறயுள்ளது. இதை தேமுதிகவினர் ஏற்காத நிலையில் அதிமுக தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் நுழைந்தார். திமுகவை ஓரம்கட்டிய விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் முழு நேர அரசியலில் ஈடுபடாமல் போனது. இந்த இடைவெளியில் தான் தேமுதிக செல்வாக்கு சரிய தொடங்கியது. அத்துடன் அதிமுகவிடம் கெஞ்சு கொண்டிருப்பதாக தேமுதிகவினரே அக்கட்சியின் தலைமையை சாடி வருகிறார்கள். 234 தொகுதியில் தனித்து போட்டி என்ற அறிவிப்பு வராதா? அல்லது 3 வது அணியில் இணைய மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிகவுக்கு முன்பிருந்த செல்வாக்கு, தற்போதுள்ள நிலைமையை எண்ணி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தனக்கு நெருக்கமான சிலரிடம் கண்கலங்கி பேசினாராம். இன்று நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா ? என தேமுதிக ஆலோசிக்கிறது.