திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் மேலும் பல வாக்குறுதிகளையும் அவர் அளித்துள்ளார்.
திருச்சி அருகே சிறுகனூரில், ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுக மாநாடு இன்று நடைபெற்றது. 750 ஏக்கர் நிலத்தில், காலை முதலே நடைபெற்று வந்த 11வது மாநில மாநாட்டின் நிறைவில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த அவர், திமுக நிறைவேற்றவுள்ள திட்டங்களை, ’ஸ்டாலின் 7 உறுதிமொழிகள்’ என்ற பெயரில் அறிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும்வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது; அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
இந்த மாநாட்டில் ’ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற பெயரில், திமுக ஆட்சியின் தொலை நோக்குத்திட்டங்களை பெருமையுடன் அறிவிக்கிறேன். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை கொண்டது. அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
அதன்படி, குடிமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வோம். வீணாகும் தண்ணீர் சதவிகிதத்தை குறைப்போம். பசுமை பரப்பளவை 25 % உயர்த்துவோம்.வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு மகசூல் பெருக்கும் மகிழும் விவசாயி என்று செயல்படுத்தப்படும். குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் வழங்கப்படும்.
அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம் திகழும். உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்படும். அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் அமைப்போம். தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு, மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, மதியம் 1 மணியளவில் ஸ்டாலின், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். அங்கு நுழைவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இக்கூட்டத்தில் திமுக மூ..த்த தலைவர் துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, கே.என். நேரு, உதயநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்